கனடாவில் இந்திய திரைப்படங்கள் திரையிட கடும் எதிர்ப்பு: திரையரங்குகள் தாக்கப்படுகின்றன
ஒட்டாவா:
கனடாவில் இந்திய திரைப்படங்களை திரையிடுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதன்தொடர்ச்சியாக, திரையரங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் ரிஷப் ஷெட்டியின் காந்தாரா: சாப்டர் 1 உட்பட பல இந்திய திரைப்படங்களை திரையிடுவது உடனடியாக நிறுத்தப்பட்டது.
இது இந்திய ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், படத்தின் வசூலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள திரையரங்குகள் கடந்த ஒரு வாரத்தில் இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தீவைப்பு, துப்பாக்கி சூடு தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளது. இதையடுத்து, அந்த திரையரங்குகளில் இந்திய திரைப்படங்கள் திரையிடுவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: ரிஷப் ஷெட்டியின் காந்தாரா: சாப்டர் 1 மற்றும் பவன் கல்யாணின் தே கால் ஹிம் ஓஜி உள்ளிட்ட இந்திய திரைப்படங்கள் திரையிடப்பட்டிருந்த திரையரங்குகளை குறிவைத்து செப்டம்பர் 25, அக்டோபர் 2 ஆம் தேதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது.
நள்ளிரவில் சொகுசுக் காரில் வந்த மர்மநபர்கள் திரையரங்குகளின் மீது தீ வைத்தும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொருட்சேதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து இந்திய திரைப்படங்களை திரையிடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்

