தொழிலில் நீடித்து நிற்க பட்டம் பதவி தேவையா? - டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால்
தொழிலில் நீடித்து நிற்க பட்டம் பதவி தேவையா? - டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால்
எதை நம்பி வியாபாரத்தில் இறங்குகிறீர்கள்? இந்தக் கேள்வி வேடிக்கையாகக் கூட இருக்கும்.
வியாபாரம் ஒரு வித்தை! அதைக் கற்றுக் கொண்டுதான் களத்தில் இறங்க வேண்டும் என்பது தொழில் மரபு. வித்தை தெரியாதவன் மேடை ஏறினால் கோமாளித்தனம்தான் மிஞ்சும்.
தொழில் சூட்சமம் மற்றும் தொழில் இரகசியம் என்று எதையும் அனுபவம் மூலமாகவோ அல்லது படிப்பு ஆலோசனை மூலமாகவோ அறிந்துகொள்ளாமல் வியாபாரம் செய்ய முயற்சித்தவர்களின் பரிதாபக் கதைகள் பல உண்டு. அதிலும் பட்டம், பதவி, அரசியல் பலம் என்று வியாபாரத்தில் குதித்தவர்களின் கதை பரிதவிப்பிற்குள்ளாகியுள்ளது.
பணம்: ‘பணம் பத்தும் செய்யும்' என்று கூறுவர். அத்துடன் 'பணம் பாதாளம் வரை பாயும்' என்ற நம்பிக்கையுடன் பலர் வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். சொந்தப் பணம் இல்லையென்றாலும் பெரும் கடனை பெறுகின்ற வாய்ப்பை அரசியல் பலத்தின் மூலம் பெறுகின்றனர். அப்படிப்பட்ட அரசியல் பலம் இல்லாமல் போகும்போது ஆபத்து வந்து சேர்ந்து, வியாபாரம் மூடுவிழா கூடக் காணும்.
பதவி: பதவியை முதலாக வைத்து வியாபாரத்தில் ஈடுபட்டர்களின் கதை வேறு விதமானது. பதவிக்கு ஒரு மவுசு இருக்கத்தான் செய்கிறது. ஆனால், பதவி நிரந்தரமல்ல. பதவி போனால், 'படுக்க பாய் கூட இருக்காது!" என்பது போல் பதவியை மட்டும் நம்பி தொழிலை தொடர முடியாது.

பட்டம்: பட்டம் ஓர் அங்கீகாரம். பல்கலைப் பட்டம் முதல், அரசு மரியாதைப் பட்டங்கள் ஒருவரைத் தூக்கிக் காட்டும். ஆனால், பட்டம் மட்டுமே முதலென கொண்டு தொழிலை தொடங்கக் கூடாது தொடரவும் முடியாது.
பட்டம், பதவி என்று எதையும் எதிர்பார்க்காமல் தொழிலை கண்ணும் கருத்துமாக கவனித்துச் செயல்படுபவர்களே தொழிலில் நிலைத்து நிற்பார்கள். பட்டமும் பதவியும் வந்தால் வரட்டும் என்று தொழில்நுட்பத்தில் திளைத்து நிற்பவர்களே வியாபாரத்தில் நீடித்து நிற்பர்.

