வியாபாரத் தலத்தை தினசரி ஒருநடை சுற்றி வாருங்கள் - டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால்
வியாபாரத் தலத்தை தினசரி ஒருநடை சுற்றி வாருங்கள் - டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால்
வியாபார தலத்தின் ஒவ்வொரு பகுதியைப் பற்றி முதலாளி - நிர்வாகி தெரிந்திருக்க வேண்டும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. எது, எந்த இடத்தில், யார், எந்த வேலையை எப்படிச் செய்கின்றார்கள் போன்ற விஷயங்களில் முதலாளி - நிர்வாகி நேரிடையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்வது கூடாது.
என்றாலும், மேலோட்டமாக முதலாளி - நிர்வாகி வியாபார தலத்தை ஓர் அலசல் செய்யாமல் விட்டுவிடுவதினால் பிரச்சினைகள் பெரிதாக உருவெடுக்கும் நிகழ்வுகள் வந்த வண்ணம் உள்ளன.
அந்த முறையை 'மேனேஜ்மென்ட் பை வாக்கிங்' (Management by walking) என்று கூறுவர்.
அதாவது, வியாபார ஸ்தலத்தையும் வியாபாரம் நடக்கும் தளத்தையும் ஒரு சுற்றுச் சுற்றி வரும்போது மேலாளருக்கு தென்படாத ஆனால், முதலாளி - நிர்வாகிக்கு தென்படும் சில கூறுகள் முன் நிற்கும்.
தினசரி வேலையில் கவனக் குறைவாக சரிகட்டப்படும் ஒரு செயல் அல்லது ஏற்பட்டுள்ள பழுது உடனடியாக கவனிக்கப்பட வேண்டும் என்ற கட்டளையை முதலாளி கொடுக்க முடியும். இந்த நடை மேலாண்மையை - மேனேஜ்மென்ட் பை வாக்கிங் (Management by walking) முறையை கடைப்பிடிக்காமல் வியாபாரங்கள் மூடு விழா கண்ட உதாரணங்கள் பல உண்டு.

ஒன்று:
உணவகத்தின் தட்டுகள், பாத்திரங்கள், கடைக்கு வெளியே தேங்கிய நீரில் கழுவப்பட்ட காணொளி கண்ணியத்தைக் கெடுத்ததுடன் கடையையே மூடிவிடும் அபாயத்திற்கு வித்திட்டுள்ளது.
இரண்டு:
குப்பைகள் குவிக்கப்பட்டு அகற்றப்படாமல் குவிந்து கிடக்கும் காட்சியைப் பொறுத்துக் கொள்ள இயலாது. சுகாதாரத்திற்கு கேடுவிளைவிக்கும் எந்தவொரு இடரும் நகராண்மைக் கழகம் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னரே உள்ளும் புறமும் அகற்றப்பட வேண்டும். தூய்மையைப் பேண வேண்டும்.
மூன்று:
வியாபாரம் நடக்கும் இடத்தை போம்பா (Bomba) எனப்படும் தீயணைப்புத்துறை பரிசோதனை செய்து ஆபத்து அவசர வழி அனுமதி வழங்கி இருப்பார்கள். ஆனால், சோதனைச் ' சான்றிதழ் பெற்ற பிறகு, அவ் வழிகளில் சரக்கும் தளவாடப் பொருள்களும் தேக்கப்பட்டு இடர்களாக காட்சியளித்து, ஆபத்து அதிகரிக்க வழி வகுக்கும்
நான்கு:
முகப்பும் முன் அமைப்புகளும் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், பேக் ஆஃபிஸ் (Back Office), பேக் யார்ட் (Back yard) எனப்படும் அமைப்புகளும் கண்காணிப்பில் கவனத்தில் என்றும் இருக்க வேண்டும்.
இப்படி எத்தனையோ விஷயங்கள் வளாகத்தில் இருக்கின்றன. உடனுக்குடன் அன்றாட வழக்கத்தில் அவை கவனிக்கப்பட்டு இடர்களை அகற்றுவது நலன் பயக்கும்.
கண்ணும் காணாதது போன்று அக்கறையின்றி தொடர்ந்தால் முழு வியாபாரமே பாதிப்பிற்குள்ளாகும்.

