பட்டப் படிப்புடன் பயன்தரும் மென் திறன்கள் - டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால்
பட்டப் படிப்புடன் பயன்தரும் மென் திறன்கள் - டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால்
பட்டப் படிப்பு என்று கல்வித் தரத்தை உயர்த்திக் கொள்ள பிள்ளைகளும் பெற்றோர்களும் முயற்சிக்கின்றனர். இது பாராட்ட வேண்டிய முயற்சி. ஆனால், பட்டப்படிப்பு, வேலைவாய்ப்பை உடனேயே ஈட்டித் தராது என்பது நாட்டின் தற்போதைய நிலைமை.
அதுவும் பட்டப்படிப்பு படித்தவர்கள் தினக் கூலிகளாகக்கூட வேலை செய்கிறார்கள் என்பதே வேதனைக்குரிய விஷயம்.
வேலையில்லா பட்டதாரிகள் நிறைந்து நிற்கும் இவ்வேளையில், அவர்களை தகுதி, தராதரம் பிரித்துப் பார்த்து வேலையில் அமர்த்த வேண்டும் என்பது கட்டாயம். பட்டப் படிப்பு, சான்றிதழ். டிப்ளோமா, பட்டயப் படிப்பு போன்ற கடின (Hard) அத்தாட்சிப் பத்திரங்கள் ஒரு பக்கம் இருக்கும். அதை மட்டும் நம்பி ஒரு பட்டதாரியை வேலைக்கு அமர்த்துவது ஒரு வகைதான்.
மற்றொரு வழியில் மென் (Soft) திறன்களையும் சோதனை செய்து வேலையில் அமர்த்த வேண்டும். அத்துடன் இந்த மென் திறன்களும் (Soft skill) கூடுதல் கவனம் கொடுக்க வேண்டும். ஏனெனில், மென் திறன் திறமைசாலிகள் உற்பத்தியை உயர்த்துவார்கள்.
அத்தகைய மென் திறன்கள் யாவை?
ஒன்று : ஒற்றுமையுணர்வு (Empathy)
மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கத் தெரியும் அறிவும், பண்பும் கொண்டிருக்க வேண்டும். வாடிக்கையாளர்களிடமும், மற்ற பணியாளர்களிடமும் ஒன்றித்து இயங்க இந்த ஒற்றுணர்வு அவசியம்.
இரண்டு: இணைந்து கூட்டாகச் செயல்படுதல்
'தனிமரம் தோப்பாகாது' என்பது போல் கூட்டு சேர்ந்து பணி செய்வது சிறந்த செயல். எவ்வளவுதான் தனித்திறமைசாலியாக இருந்தாலும், கூட்டுறவு இன்றி இயங்கும் ஒரு நபர், நிறுவன இயல்பிற்கு ஒத்து வராதவர்.

மூன்று : தொடர்பு முறைகள் (Communication Skills)
மேலாளர் - பணியாளர் தொடர்பு முறைகளும், சக வேலையாட்களுடன் உறவாடும் தொடர்பு முறைகளும் பணியிடத்தில் உற்பத்தித் திறனை நிர்ணயிக்கும். சாக்குப் போக்குப் பேச்சிற்கு இங்கு இடமில்லை.
(i) பேச்சுத் தொடர் முறைகள் (Verbal communication) இது இங்கிதமாகவும் கச்சிதமாகவும் இருக்க வேண்டும். கடின பதங்களின் உபயோகம் தவிர்க்கப்பட வேண்டும். ஒதுக்கப்பட வேண்டும்.
(ii) கேட்கும் திறன் (Listening Skill) எதுவும் பேசாமலேயே கேட்கும் திறனும் சொல்லாமலேயே சொல்லும் ஒரு வகை தொடர்பு முறைதான்.
(iii) உடல் மொழி (Body Language) ஒரு வார்த்தைக்கூடச் சொல்லாமல் உடல், தன் முகபாவங்கள் மூலம் உரத்த செய்தியைச் சொல்ல முடியும்.
எனவே, வேலைக்கு ஆள்தேடும்போதும், தேர்வு செய்யும் போதும் 'கடின' படித்த அத்தாட்சிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்துடன் மென்திறன்களையும் மதிப்பீடு செய்ய வேண்டும். மென்திறன் கொண்டவர்கள் கெட்டிக்காரர்கள்.

