எல்லை பிரச்னையை சுமுகமாக தீர்க்க உறுதி: இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவை மேம்படுத்த இந்தியப் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் முடிவு
தியான்ஜின்:
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்காக சீனா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை நேற்று சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையில் எல்லைப் பிரச்னைக்கு நியாயமான, பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு காண இரு தலைவர்களும் உறுதி பூண்டனர்.
மேலும், இருதரப்பு வர்த்தக உறவை விரிவுபடுத்தவும், இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் நேரடி விமான சேவையை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது.
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்புக்கு மத்தியில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி சீனாவுக்கு சென்றிருப்பது, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் முக்கிய மாற்றத்தின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், எஸ்சிஓ மாநாடு தொடங்குவதற்கு முன்பாக, பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று காலை நடந்தது. சுமார் 55 நிமிடங்கள் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடியும், அதிபர் ஜின்பிங்கும் விவாதித்தனர்.
அப்போது, இந்தியா, சீனா உறவின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு எல்லையில் அமைதி நிலவுவதன் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி குறிப்பிட்டார். பரஸ்பர நம்பிக்கை, கண்ணியம் மற்றும் உணர்திறன் அடிப்படையில் உறவுகளை முன்னேற்றுவதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்

