இறப்புக்கு மட்டுமா இன்னாலில்லாஹி? - பொருள் என்ன? - வெள்ளிச் சிந்தனை
இறப்புக்கு மட்டுமா இன்னாலில்லாஹி? - பொருள் என்ன? - வெள்ளிச் சிந்தனை
ஏதேனும் துயரச் செய்தியைச் செவியுறும்போது முஸ்லிம்கள் சொல்லும் ஒரு சொற்றொடர்- ‘இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்’
முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் ஓர் இறப்புச் செய்தியைப் பதிவிடும்போது நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் பின்னூட்டமாக இடும் சொற்றொடரும் இதுதான்.
இந்தச் சொற்றொடரின் பொருள் என்ன?
“நிச்சயமாக நாம் இறைவனுக்கு உரியவர்கள். நிச்சயமாக அவனிடமே திரும்பிச் செல்வோராய் இருக்கிறோம்” என்பதுதான் அதன் பொருள்.
உண்மையில் இந்தச் சொற்றொடர் திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள ஒரு வசனமாகும். அந்த வசனம் வருமாறு:
“சிறிதளவு அச்சத்தாலும் பசியாலும், உடைமைகள், உயிர்கள், விளைபொருள்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் திண்ணமாக நாம் உங்களைச் சோதிப்போம்.
இந்த நிலைகளில் பொறுமையை மேற்கொள்கின்றவர்களுக்கு நீங்கள் நற்செய்தி கூறுங்கள்.
அவர்கள் (எத்தகையோர் எனில்) தங்களுக்கு ஏதேனும் துன்பம் நேரிடும் போது, ‘நிச்சயமாக நாம் இறைவனுக்கு உரியவர்கள். நிச்சயமாக அவனிடமே திரும்பிச் செல்பவர்களாய் இருக்கிறோம்’ என்று சொல்வார்கள்.”(திருக்குர்ஆன் 2:155-156)
மார்க்க அறிஞர்கள் இதற்குப் பின்வருமாறு விளக்கம் தருகிறார்கள்:
“நம்மிடம் உள்ளவை அனைத்தும் இறைவனுடையதே. அவனே அவற்றை வழங்கியிருக்கிறான். அவனே அவற்றைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறான்.
நாமும் அவனுக்குரியவர்களே. அவன் பக்கமே திரும்பிச் செல்லக் கூடியவர்களாய் இருக்கிறோம்.
எந்த நிலையிலும் இறைவனின் நாட்டத்தைக் குறித்து நாம் திருப்தி அடைகிறோம்.
அவனுடைய ஒவ்வொரு செயலும் விவேகம், நுட்பம், நீதியின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது.
அவன் செய்வதெல்லாம் ஒரு பெரும் நன்மையை முன்னிட்டே செய்கின்றான்.
வாய்மையான அடியாரின் பணி இதுவே: தன் இறைவனின் செயலைக் குறித்து எந்த நேரத்திலும் அவன் நெற்றியைச் சுருக்குவதில்லை. துக்கம் அடைவதில்லை.”
நபிகளார்(ஸல்) கூறினார்கள்:
“சோதனைகளும் துன்பங்களும் எந்த அளவுக்குக் கடினமாக ஏற்படுகின்றனவோ அந்த அளவுக்கு இறை வனின் கருணையும் கிடைக்கும்.”
ஆகவே துன்பங்கள், இன்னல்கள், இடையூறுகள் ஏற்படும்போது “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்” என்று கூறி பொறுமையை மேற்கொள்வோம்..
இறையருளைப் பெறுவோம்.
“சோதனை- துன்பங்களின் போது ஒருவர் இறைவன் மீது நிராசை- வெறுப்பு அடைந்தால் இறைவனும் அவர்மீது வெறுப்பு அடைகிறான்.”- (நபிமொழி)
-சிராஜுல் ஹஸன்

