BREAKING NEWS: தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் தமிழருக்கு இடம்: அமைச்சர் சிவகுமார்
புத்ராஜெயா:
தேசியக் கல்வி ஆலோசனை மன்றத்தில் தமிழருக்கு நிச்சயம் இடம் வழங்கப்படும்.
இது தொடர்பில் விரைவில் அறிவிப்புகள் வரும் என்று மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் கூறினார்.
இன்று காலையில் கல்வி அமைச்சர் ஃபாட்லினா சிடேக்கை அவரது அமைச்சில் சந்தித்து 30 நிமிடங்களுக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தினேன்.
நாட்டில் உள்ள 528 தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம், மேம்பாடுகள் குறித்து பேசுவதற்கு தேசிய கல்வி ஆலோசனைக் குழுவில் தமிழ் படித்த ஒரு தமிழர் இடம் பெறாமல் போனதால் சமுதாயத்தின் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதை கல்வி அமைச்சரிடம் எடுத்துரைத்தேன்.
இது மொழி சம்பந்தப்பட்ட உணர்ச்சிமிக்க விவகாரம். மலேசியத் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழர் ஒருவரையோ அல்லது இருவரையோ தேசியக் கல்வி ஆலோசனைக் குழுவில் இடம் பெறச் செய்யுங்கள் என்று கல்வி அமைச்சரை கேட்டுக் கொண்டேன்.
சமுதாயத்தின் சார்பில் நான் முன் வைத்த கோரிக்கையை கல்வி அமைச்சர் மிக கவனமுடன் கேட்டுக் கொண்டார்.
மிக விரைவில் இது தொடர்பில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை கல்வி அமைச்சர் ஃபாட்லினா சிடேக் வெளியிடுவார்.
இப்போதைக்கு இந்த விவகாரம் நல்ல முறையில் தீர்வு காணப்பட்டுள்ளது.
தேசியக் கல்வி ஆலோசனைக் குழுவில் தமிழர் இடம் பெற வேண்டும் என்று சமுதாய உணர்வோடு குரல் கொடுத்த அனைத்து தரப்பினருக்கும் இவ்வேளையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினரும் மனிதவள அமைச்சருமான சிவகுமார் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்

